ஞாயிறு கொண்டாட்டம்

தலைமுறை தலைமுறையாக  ஒரு பொம்மலாட்டப் பயணம்...

பொம்மலாட்டம். கொஞ்சம் கொஞ்சமாக அருகி வரும் பாரம்பரியக் கலைகளில் ஒன்று. எந்தத் தொழில்நுட்பமும் இல்லாத காலத்திலேயே, படைப்பாற்றல், அறிவுத் தொழில்நுட்பத்தை மட்டுமே மையமாகக் கொண்டு

சா. ஜெயப்பிரகாஷ்

பொம்மலாட்டம். கொஞ்சம் கொஞ்சமாக அருகி வரும் பாரம்பரியக் கலைகளில் ஒன்று. எந்தத் தொழில்நுட்பமும் இல்லாத காலத்திலேயே, படைப்பாற்றல், அறிவுத் தொழில்நுட்பத்தை மட்டுமே மையமாகக் கொண்டு இந்த அற்புதமான கலை தமிழ்ச் சமூகத்தில் வேரூன்றியிருக்கிறது என்பது முக்கியமானது.
 திருச்சியில் "கேர்' கட்டடக்கலைப் பள்ளி சார்பில் நடைபெற்ற இரு நாள் "ஆர்ட் பார் ஆல் 2013' கலைத் திருவிழாவின் ஓர் அம்சமாகத்தான் "வள்ளி திருமணம்' நாடகம் பொம்மலாட்டமாக நடத்தப்பட்டது.
 திருச்சி போன்ற பெருநகர மக்களுக்கு, அதுவும் குறிப்பாக லட்சக்கணக்கில் செலவு செய்து "கட்டடக் கலை' படிக்க வந்துள்ள மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் "பொம்மலாட்டம்' முற்றிலும் புதிது. வள்ளி திருமணத்தை கதைகளாகக் கேட்டிருக்கக் கூடும்.
 மாரியம்மனைத் துதித்து பொம்மலாட்டம் தொடங்கியது. இரு பொம்மைகள் தலையில் வேப்பிலைக் கரகம் எடுத்து ஆடின. மலைக் குறவர் குலத்தின் மகாராஜன் நம்பிராஜனின் மகள் வள்ளி. இவருக்கும் முருகனுக்கும் திருமணம்- இதுதான் கதை.
 வள்ளியைக் காண வந்த நாரதருக்கும், வெளியே காவலிருந்த காவலாளிக்கும் நடந்த உரையாடல், நகைச்சுவையாக அமைக்கப்பட்டிருக்கிறது. ""என்ன படித்திருக்கிறாய் மூடா?'' என நாரதர் கேட்க, ""ஒன்பது ஆண்டுகளாக ஒன்றாம் வகுப்பு படிக்கிறேன்'' என்கிறார் காவலாளி.
 ""அது எப்படி?'' என நாரதர் கேட்க, ""ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒவ்வொரு வகுப்பாகத் தாண்டி ஒன்பதாவது வகுப்பு படிக்கும்போது, ஏன் ஒன்றாவது வகுப்பை ஒன்பதாவது ஆண்டாகப் படிக்க முடியாது?'' எனக் கிடுக்கிப்பிடி போடுகிறார் காவலாளி!
 உள்ளே சென்று வள்ளியிடம் நாரதரைப் பற்றிக் கூறுகிறார் காவலாளி. "தலையில் கொண்டை போட்டுக் கொண்டு, நெற்றியில் 111 போட்டுக் கொண்டு, இடுப்பில் ஆப்பைக்குச்சியை வைத்துக் கொண்டு யாரோ "நாரதர்ர்ர்ர்ராம்' என்கிறார் காவலாளி.
 வள்ளியைச் சந்தித்து, ""முருகனை மணந்து கொள்கிறீர்களா?'' எனக் கேட்கிறார் நாரதர். ஆசை இருந்தாலும் உடனே எப்படி சம்மதம் சொல்வது? ஏதாவது கலகம் செய்துவிட்டாரேயானால்? என்ற சந்தேகத்துடன் முரண்டுபிடிக்கிறார் வள்ளி.
 நாரதர் இதை முருகனிடம் சொல்லிவிட, காணாமல் போன மானைத் தேடி வரும் குறவனைப் போல வருகிறார் முருகன். பிறகு முதியவர் வேடத்தில் வருகிறார். அதன் பிறகு வள்ளியை சரிக்கட்ட தனது அண்ணன் விநாயகரைத் துணைக்கு அழைக்கிறார்.
 முரட்டு யானையாக வந்து வள்ளியை மிரட்டி திருமணத்துக்கு சம்மதிக்க வைக்கின்றனர். ""கிழவனைக் கட்டிக் கொண்டு, பொட்டுன்னு மண்டைய போட்டுட்டீன்னா?'' எனக் கேட்கிறார் வள்ளி. சிறிது
 நேரத்தில் மறைந்து தன்னுடைய உண்மையான உருவத்தில் முருகன் வர, இருவருக்கும் திருமணம் நடந்து முடிகிறது பொம்மலாட்டம்.
 பொம்மைகளை நடிக்கச் செய்வது அத்தனைச் சுலபமானதா? பொம்மைகளின் கைகள், திரைக்குப் பின்னே ஆட்டுவிப்பவரின் கைகளிலும், பொம்மைகளின் உடல் அசைவுகள் முழுவதும் அவரது உடலிலும், முக்கிய அவயங்கள் அவரது தலையில் கயிறால் பிணைக்கப்பட்டிருக்கின்றன.
 திரைக்குப் பின்னால் கடுமையாகப் பணியாற்றுகிறார்கள். தொடக்கத்தில் பொம்மலாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களை மேடைக்கு அழைத்து, ஒரு பெண் பொம்மையைக் கொண்டே அவர்களுக்கு மாலை அணிவித்து, திருஷ்டி கழித்து, உச்சிமுகர்ந்து முத்தமிடச் செய்து... பிரமாதப்படுத்துகிறார்கள்.
 கும்பகோணத்தைச் சேர்ந்த ஸ்ரீ முருகன் சங்கீத பொம்மலாட்ட சபா இந்த பொம்மலாட்டத்தை நடத்தியது. இதன் அமைப்பாளர் கலைமாமணி டி.என். சங்கரநாதன். வயது 86. ஏறத்தாழ 75 ஆண்டுகளாகச் சபாவை நடத்தி வருகிறார்.
 தனது மகன்கள் டி.எஸ். முருகன், ரவி, கோபி ஆகியோரையும் இந்தக் கலையில் ஈடுபடுத்தியிருக்கிறார். இப்போது ஏறத்தாழ பொம்மலாட்டத்தை நடத்துபவரே சங்கரநாதனின் மூத்த மகன் முருகன்தான். இந்தத் தலைமுறை தாண்டி, முருகனின் மகன் கார்த்திகேயனும் பொம்மலாட்டக் கலைஞராக இருப்பது கவனிக்க வேண்டியது. கார்த்திகேயன் இந்த ஆண்டு பிளஸ் 1 முடித்துவிட்டார்.
 ""பாரம்பரியமான பொம்மலாட்டக் கலை அழிந்து கொண்டே வருகிறது. என்னாலான வரை இதைத் தடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். எனக்கும் பார்வை, குரல் எல்லாமும் குறைந்து கொண்டே வருகிறது. மகன்கள் இப்போது தலையெடுத்துவிட்டார்கள்.
 அரசு நடத்தும் பொருட்காட்சிகளில் எங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். பொம்மைகளைச் செய்வோரும் இல்லை. எனவே, பொம்மைகளையும் நாங்களே தயாரிக்கிறோம், பழுதுபார்க்கிறோம். இதற்கும் அரசு உதவி செய்ய வேண்டும்'' என்கிறார் சங்கரநாதன்.
 "வசனங்கள் முழுக்க வாய் மொழியால் கேட்டறிந்ததுதான். எழுதிப் படிக்கவெல்லாம் முடியாது' என்கிறார் டி.எஸ். முருகன். இப்படித்தான் தமிழ்ச் சமூகப் படைப்புகள், எந்த ஆவணப்படுத்தலுமின்றி ஆனால் எளிதாக தலைமுறை தலைமுறையாக சொல் வழக்கில் கடந்து கொண்டே இருக்கிறது.
 } சா. ஜெயப்பிரகாஷ்
 படம்: தேனாரமுதன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT